உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு நம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற குடும்ப சகிதம் பத்திரகாளி அம்மன் கோவில் சென்று வழிபடுதல் நமது தமிழர் மரபாகும். இந்தவகையில் கனடாவில் எழுந்தருளியிருந்து அருள்பாலித்துவரும் மேருபுரம் பத்திரகாளி அம்மன்கோவில் திகழ்ந்துவருவது நாங்கள் செய்த பூர்வீக பூண்ணியமாகவே கருதுகின்றோம்.
வருடாந்த உற்சவம் தற்பொழுது வெகுவிமர்சையாக நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே. வெள்ளிக்கிழமை சப்பறத் திருவிழாவும் சனிக்கிழமை கனடாவில் பஞ்ச ரத பவனிவரும் ஒரேஒரு கோவிலாக இந்த ஆலயம் இருந்து வருவதினால் ஏராளமான அம்மன்பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடைபெற்றுவரும் விழாவினை மிகவும் சிறப்பாக ஆலயத்தின் மகோற்சவ குருக்களான சிவாகம திலகம், கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ சிவகுமார குமாரதாச குருக்கள் அவர்களுடன் மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவாகிய பிரம்மஸ்ரீ லிங்கசுரேஷ் குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீலிங்கரமேஷ் குருக்கள் இணைந்து மிகவும் சிறப்பாக சகல விழாக்களையும் மிகவும் சிறப்பான சாத்துப்படிகளை அமைத்து விழாவினை நடத்தி வருவதினை பாராட்டாமல் இருக்கமுடியாது.
அம்மன் கோவில்கள் எங்கும் கூடுதலாக பெண்பக்தர்கள் ஒன்றுகூடி தங்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அம்மன் பத்திரகாளியிடம் வேண்டுதல்களை மேற்கொள்வார்கள். காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த மேருபுரம் பத்திரகாளி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் மேருபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வழக்கமாகும்.
எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பத்திரகாளி அம்மனை குளிரச்செய்வர். பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை. அதை அழகுற அணிவித்து அழகாக்குவர். தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு பத்திரகாளி அம்மன் எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.
தெய்வீக மணம் கமழும் மாதமாக கனடாவில் ஆவணிமாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே கனேடிய இந்துக்கள் அழைக்கிறார்கள். அந்தளவுக்கு பத்திரகாளி அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், மேருபுரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று வருவார்கள். நேற்றையதினம் (2015-09-01) மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நடனத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கண்கவர் சாத்துப்படிகள் அமைக்கப்பட்டு பத்திரகாளி அம்மன் சிறப்பான பல்வேறு வகையான நிறங்களையுடைய பூக்களினால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தது இறையருள் கலந்த சந்தோசத்தினை தந்தது என்றால் அது மிகையாகாது.
வசந்த மண்டப பூஜைஜினை தொடர்ந்து பத்திரகாளி அம்மன் உள்வீதி வெளிவீதி வலம் வரும் காட்சி நடைபெற்றது. வீதி சுற்றிவரும்போது பக்தர்கள் பூக்கள் துவி பத்திரகாளி அம்மனை வழிபட்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறப்பம்சமாக பல நாதஸ்வர தவில் வித்துவான்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்பாக இனிமையான பாடல்களினை வாசித்து பக்தர்களை இன்பமயப்படுத்தினார்கள். குறிப்பாக தில்லானா, நாகமுடி, சிங்காரவேலனே போன்ற பாடல்களை மிகவும் அசத்தலாக வாசித்து இன்ப மழை பொழிந்தார்கள். விழா நடைபெற்றவேளை ஏராளமான பக்தர்கள் பலதரப்பட்ட நேர்த்திக்கடன்களை பத்திரகாளி அம்மனிடம் சமர்ப்பித்து இறையருள் பெற்றதனை அவதானிக்க முடிந்தது. மேலும் ஒரு சில பக்தர்கள் கூட்டம் ஆலயத்தின் மூலஸ்தானத்தின் முன்பாக வரிசையாக அமர்ந்திருந்து சிறப்பான அர்ச்சனையுடன் கூடிய பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதனை அவதானிக்க முடிந்தது. ஆலயத்தின் மகோற்சவ குருக்களான சிவாகம திலகம், கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ சிவகுமார குமாரதாச குருக்கள் நேற்றைய தினம் ஆகம விதிகளுக்கு அமைய நடத்திமுடித்த யாக பூஜைகளை நேரில் பார்த்து ஒரு கணம் அசந்து போய் தொடர்ச்சியாக வழிபாடுகளில் ஈடுபட்டேன். குருக்கள் அவர்கள் மிகவும் பொறுமையுடன் மந்திரங்கள் முழங்க மிகவும் சிறப்பாக யாக பூஜைகளை நடத்தி முடித்ததை பாராட்டாமல் இருக்கமுடியாது. பூஜைகளின் இறுதியில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. சகல பக்தர்களையும் இனிவரும் விழாக்களில் கலந்துகொண்டு பத்திரகாளி அம்மனின் இறையருளினை பெற்று உய்யுமாறு வேண்டிநிட்கின்றோம்.
Langes, FCPA, FCGA