இப்படம் குறித்து கலை இயக்குனர் மிலன் பேசுகையில், ‘விவேகம்’ படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமைப்படும் படமாக இது இருக்கும்.

கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது. சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன். உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் முன்னோடியாக இருந்தார்.

அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்” என்றார்.
விவேகம் படத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளனர். சிவா இயக்கியுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.