முருகபெருமானின் வேலையும், மயிலையும் நினைத்து வழிபடுபவர்களின் துன்பங்கள் தீரும் என்பது அருணகிரிநாதரின் வாக்கு. முருகபெருமான் கையில் உள்ள வேல் அவரது தாயான பார்வதிதேவி வழங்கிய வேல். சக்தி மிகுந்த வேல். அன்று சூரர்களை அழித்தது. இன்று முருகனது வேல் நமது தீவினைகளை, தீய குணங்களை அழித்து மனிதனை செம்மைப்படுத்துகிறது. அதைப்போன்று கொடுமைகள் பலபுரிந்த சூரபதுமன்அழிந்து அவனது ஆன்மாவே முருகனின் வாகனமான மயிலாக மாறியது. இதுவும் முருகனின் அருளால் என்று கச்சியப்பர் புலவர் கூறுகிறார்.
வேலும், மயிலும் துணை. வேலும் மயிலும் துணை என்று இடையறாது சொல்லி பெற வேண்டிய பேறு பெற்றவர்கள் பலர். வேலையும், மயிலையும் வணங்கி வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும், சகல பேறுகளும் கிடைக்கும்.
ஓர் அதிகாரியை அணுக வேண்டுமானால் வாயிற்காவலரை வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இயல்பு. இதை அன்றே உணர்ந்த அருணகிரிநாதர், முருகனின் வேலையும், மயிலையும் பத்து பத்து விருத்தப்பாடல்களாக பாடியுள்ளார். மேலும் தனது திருப்புகழ் பாடல்களில் மயில் குறித்து 213 இடங்களிலும், வேல் குறித்து 123 இடங்களிலும் சேவல் பற்றி 58 இடங்களிலும் பாடியிருக்கிறார்.
வேலின் தத்துவம் எது என்றால் அறிவின் முழு உருவம் வேலாயுதம். ஞான பூரண சக்தி என்று வேலைக்குறிப்பர். வெற்றியை தரும் வேலை வணங்குவதே எமக்கு வேலை என்று சான்றோர் கூறுவர். மயில் என்பது ஓம் என்ற பிரணவ சொரூபம். உமையம்மை மயில் உருவத்தில் சிவபெருமானை வழிபட்டார்.
வேல் விருத்தம் பாடல்களில் வேலின் சிறப்புகள் பலவாறு சொல்லப்படுகின்றன. வேலாயுதத்தால் மட்டுமே சூரபதுமன் உள்பட அனைத்து அசுரர்களும் அழிந்தனர். சிவபெருமானின் பாசுபத அஸ்திரமான சூலாயுதமும், திருமாலின் சக்ராயுதமும், தேவேந்திரனுடைய வஜ்ஜிராயுதமும் இந்த மூன்றைக்காட்டிலும் வலிமையானது முருகனின் வேல்.
முருகபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களை எப்போதும் புகழ்ந்து கொண்டிருக்கிற அடியவர்களின் நாவிலும், அறிவிலும் எந்தை கந்தவேள் வேலானது. அவர்களுக்கு நல்வழிகாட்டும்.